Tuesday, December 15, 2009

இந்தியா முதலிடம்

மும்பை: . டெஸ்ட் வரலாற்றில் இந்திய அணி 77 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக "நம்பர்-1' இடம் பெற்று புதிய வரலாறு படைத்தது. மும்பை டெஸ்டில் அபாரமாக ஆடிய இந்திய அணி, இலங்கையை ஒரு இன்னிங்ஸ் 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் தொடரை 2-0 என கைப்பற்றி, கோப்பை வென்றது. டெஸ்ட் போட்டி தரத்தில் இந்தியா உலக சாதனை படைத்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளது. கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என இந்திய கேப்டன் தோனி கூறியுள்ளார். இன்று ( 6ம் தேதி ) இந்தியா, இலங்கை அணிகள் மோதிய 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 393 ரன்கள் எடுத்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 726 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணியின் விக்கெட்டுகள் ‌ஆட்ட துவக்கம் முதலே சரிய துவங்கின. இறுதியாக இலங்கை தனது 2வது இன்னிங்சில் 309 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்த வெற்றியை ‌பெற்றது. இலங்கை அணியில் அதிகபட்சமாக கேப்டன் சங்ககரா 137 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் ஜாகீர் கான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இந்த டெஸ்ட்டில் பெற்ற வெற்றியின் மூலம் இந்திய அணி தொடர்ந்து 2வது முறையாக இன்னிங்ஸ் வெற்றி பெற்று, தொடரை வென்று சாதனை புரிந்துள்ளது. ஆட்ட நாயகனாக சேவாக் : அதிகமாக ரன்குவித்த சேவாக் ( 293 ரன்கள் ) ஆட்ட நாயகனாகவும், தொடர்நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை அணியின் முத்தையா முரளிதரனுக்கு பந்துவீச்சாளர் விருது வழங்கப்பட்டது. குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் குவித்த ஜோடியாக சேவாக்-டிராவிட் ஜோடி தேர்வு செய்யப்பட்டது. இலங்கை அணி உடனான 3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 2-0 என்ற புள்ளியில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 77 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் சர்வதேச அளவிலான டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 124 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்திலும், 122 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா 2வது இடத்திலும், 116 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 3வது இடத்திலும் உள்ளன. கனவு நனவானது என்கிறார் தோனி : "நம்பர்-1' இடம் பெற்றதன் மூலம் நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது. கடந்த 18 மாதங்களாக முதலிடம் பிடிக்கும் நோக்கத்துடன் சிறப்பாக விளையாடினோம். அணியின் கூட்டு முயற்சியால் இலக்கை எட்டியுள்ளோம். அடுத்த 6 மாதங்களில் 2 டெஸ்ட் போட்டியில் மட்டும் பங்கேற்க உள்ளோம். இதனால் முதலிடத்தை தக்க வைப்பது மிகவும் கடினம். சச்சின் பேட்டி : இந்தியா முதன்முறையாக உலக தர வரிசையில் முதலிடம் பிடித்திருப்பது குறித்து சச்சின் கூறுகையில் இந்த வெற்றிக்காக நாங்களும் , ரசிகர்களும் நீண்ட நாட்கள் காத்திருந்தோம். இந்த வெற்றிக்கு பயிற்சியாளரின் அறிவுரையும் காரணம் என்றார். ஜனாதிபதி பாராட்டு : டெஸ்ட் அரங்கில் முதலிடம் பெற்றுள்ள இந்திய அணிக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர், தனது பாராட்டு செய்தியில்,""முதலிடம் பெற தகுதிவாய்ந்த அணியாக திகழ்கிறது. இது இந்திய வீரர்களின் திறமையை பிரதிபலிக்கிறது,'' என குறிப்பிட்டுள்ளார். கங்குலி, கும்ளேக்கு பங்கு: கவாஸ்கர்: முதலிடம் பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். அணியின் எழுச்சியில் முன்னாள் வீரர்களான கங்குலி, கும்ளேக்கு பங்கு உண்டு. போராடும் குணத்தை இவர்களிடம் இருந்து தான் சக வீரர்கள் கற்று தேர்ந்தனர். முதலிடத்தை தக்க வைக்க வீரர்கள் கடும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment